
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இத்தேசிய அளவிலான விருது விழாவானது, சுற்றாடல் நிலைபேர் தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்களையும் நிறுவனங்களையும் அங்கீகரித்து கௌரவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பேண்தகு தன்மையை முன்னெடுப்பதிலும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் பங்களிப்புச் செய்யும் சிறந்த நபர்களையும் நிறுவனங்களையும் கௌரவிப்பதன் மூலம் பசுமையான இலங்கையைக் கட்டியெழுப்புவதை இவ்விருது விழா வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி அவர்கள், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள், சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜெயக்கொடி, மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல உள்ளிட்ட பல முக்கிய அதிதிகள் கலந்துகொண்டனர்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் அவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆர். எஸ். பி. கபில ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைத்தொழில், கல்வி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பொலிஸ் சுற்றாடல் பிரிவுகள், உள்ளூராட்சி மன்றங்களின் திண்மக் கழிவு முகாமைத்துவ மையங்கள், சுற்றாடல் துறையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள், சுற்றாடல்-நட்பு ரீதியான புதுமையாக்கங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1,000 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய 193 வெற்றியாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்குத் தகுதிச் சான்றிதழ்கள், வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற புகழ்பெற்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சுற்றாடல் பாதுகாப்பை முன்னோக்கிக்கொண்டு செல்வதிலும், பசுமையான நிலைபேறான இலங்கையைக் கட்டியெழுப்புவதிலும் கூட்டுச் செயற்பாடு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை இவர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன.
விழாவிற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் வகையில், சுபாரதி மகாமத்திய வித்யாலய மாணவர்களால் சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டதுடன், சந்தன விக்கிரமசிங்க அவர்களின் நடனக் குழுவினரின் கவர்ச்சிகரமான நடன நிகழ்ச்சிகள் நிகழ்வின் கலாசாரப் பொழிவை அதிகரித்து, சுற்றாடலுக்கான அர்ப்பணிப்பையும் சாதனைகளையும் நினைவுகூரும் மறக்கமுடியாத நிகழ்வாக அதனை மாற்றின.
2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவானது, சுற்றாடல் பாதுகாப்பிற்குப் பங்காற்றியவர்களைக் கௌரவித்ததுடன், நிலைபேறான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் கூட்டுப் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய ஒரு அர்த்தமுள்ள மற்றும் மறக்க முடியாத நிகழ்வாக இது அமைந்தது.


