
(ஜவ்சன் அஹமட் மருதமுனை)
முத்தூர் JMI Publication நிறுவனப் பணிப்பாளர் ஜுனைடீன் முஹம்மது இஹ்சானுக்கு மகுடம் சூட்டிய மற்றுமொரு இலக்கிய அங்கீகாரம்!
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும் வருடாந்த சாகித்திய மண்டல சிறந்த நூல் விருது வழங்கும் நிகழ்வில், ‘பட்டாம்பூச்சி விளைவு’ நூலுக்காக ஆய்வு இலக்கியப் பிரிவில் விருது பெற்றுள்ளார் மூதூர் JMI Publication நிறுவனத்தின் பணிப்பாளர் ஜுனைடீன் முஹம்மது இஹ்சான் அவர்கள்.
இலக்கியம், கலை, படைப்பாற்றல் ஆகிய துறைகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்ற அவருக்கு, இந்த விருது மற்றுமொரு பெருமைக்குரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
தனது தனிப்பட்ட இலக்கியப் பயணத்துடன் நின்றுவிடாமல் ஏனைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் திறமைகளையும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் இஹ்சான் அவர்கள் தனித்துவமான பங்களிப்பைச் செய்து வருகின்றார்.
அண்மையில் மூதூர் JMI Publication நிறுவனத்தின் ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் கலைத்திறன்களைக் கௌரவித்ததுடன் ஒரே மேடையில் 60 நூல்களை வெளியீடு செய்து தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
புதிய படைப்பாளர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், படைப்பாளர்களின் உழைப்பை அங்கீகரித்தல், நூல் வெளியீடுகளை ஊக்குவித்தல் எனப் பல்வேறு வழிகளில் இலக்கிய வளர்ச்சிக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் அவருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கின்றது.
ஒரு படைப்பாளராக மட்டுமன்றி, பல படைப்பாளர்களை உருவாக்குவதற்கும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் பங்களிக்கும் இஹ்சான் அவர்களின் இலக்கியப் பயணம் மேலும் சிறக்கட்டும்.
‘பட்டாம்பூச்சி விளைவு’ நூலுக்காக ஆய்வு இலக்கியப் பிரிவில் விருது பெற்ற ஜுனைடீன் முஹம்மது இஹ்சான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இலக்கியப் பணிகளும் கலைச் சேவைகளும் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகின்றோம்.


