
பல்வேறு காரணங்களால் கல்விக்குத் தடைகள் ஏற்படும் மாணவர்கள், அத்தடைகளைக் கடந்து தொடர்ச்சியாகக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கும் முக்கிய நோக்கத்துடன் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகள், அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோபரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தில் புதிய நன்மைகளை உள்ளடக்கித் திருத்தம் செய்து அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான புதிய நன்மைகளை உள்ளடக்கிய யோசனைக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகக் கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் கீழ், கேட்கும் கருவிகளைத் திருத்துவதற்கும் அதற்கான செலவுகளுக்கும் 75,000 ரூபா வரையான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) மற்றும் நீண்டகால அழற்சி மூட்டுவாதம் (Chronic Inflammatory Arthritis) போன்ற நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபா வரையான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தோல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை, உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய நிணநீர்க்கணு தொடர்பான பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனை (PTLD), எலும்புப்புரை (Osteoporosis) பரிசோதனை, ஹெபடைட்டிஸ் B, ஹெபடைட்டிஸ் C மற்றும் HIV பரிசோதனைகள் உள்ளிட்டவற்றுக்கான செலவுகளுக்கு 20,000 ரூபா வரையான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தீவிர நோய்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள ‘Cancer Treatment’ என்ற வகை, ‘Cancer Treatment and Related Testing’ எனத் திருத்தம் செய்யப்படவுள்ளது. திடீர் விபத்துகளால் ஏற்படக்கூடிய இடுப்புப் பகுதி, தோள்பட்டை மற்றும் முழங்கால் மூட்டுகளை மீளமைப்பதற்கான முக்கிய சத்திரசிகிச்சைகள் மற்றும் PET Scan பரிசோதனைக்கான செலவுகளும் தீவிர நோய்கள் வகுதிக்குள் உள்ளடக்கப்படவுள்ளன.
மேலும், பாடசாலை வளாகத்திற்குள்ளும் வெளியிலும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும், கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் செயற்பாடுகளின்போது, குறிப்பாகக் கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின்போது, திடீர் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால், திடீர் விபத்துக் காப்புறுதிப் பிரிவின் கீழ் 100,000 ரூபா நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது


