
தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் கப்பல் போக்குவரத்து தாமதங்கள் காரணமாக இலங்கைக்கு சுமார் 18.3 பில்லியன் ரூபாய் இழப்பும் மேலதிக செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் எஸ். எம். மரிக்கார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான நிபுணர் குழுவொன்றின் விசாரணையை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொள்வனவு நடைமுறைகள், தரத்தில் காணப்பட்ட வேறுபாடுகள் மற்றும் மின்சார உற்பத்தியில் அவற்றால் ஏற்பட்ட நிதிப் பாதிப்புகள் குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியதால் 7.099 பில்லியன் ரூபாயும், தேவையான 300 மெகாவாட் மின்சார உற்பத்தியை அடைய முடியாத காரணத்தால் மேலதிக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய 8.572 பில்லியன் ரூபாயும் செலவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கூடுதல் பராமரிப்புச் செலவுகள், சாம்பலை எடுத்துச் செல்வதற்கான செலவுகள் மற்றும் நிலக்கரி கப்பல்களின் வருகையில் ஏற்பட்ட தாமதங்களால் அவசரமாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ததற்கான செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மதிப்பிடப்பட்ட 18.3 பில்லியன் ரூபாய் நிதிப் பாதிப்பில் உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்துடன் தொடர்புடைய செலவுகளும், உள்நாட்டில் அரசாங்கம் வழங்கிய மானியங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்தச் செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு விசாரணைக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


