தெரிவில் அதிருப்தி; கலைஞர்கள் ஆதங்கம்!

கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கலைஞர் கௌரவிப்பு விழாவிற்கான தெரிவுப் பட்டியலில், நீண்டகாலமாகக் கலை, இலக்கியத் துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தகுதியான கலைஞர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகவும், தகுதியற்ற முறைமைகள் மூலம் தகுதியான கலைஞர்களுக்குப் பின்னடைவு (கழுத்தறுப்பு) ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்துறைப் படைப்பாளிகளும், சிரேஷ்ட ஆசிரியர்களும், பல நூல்களை எழுதி வெளியிட்ட இலக்கியவாதிகளுமான தகுதியான கலைஞர்களின் பங்களிப்புகள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இவர்கள், விருதுக்கான வழிகாட்டல்களில் 45 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான ஏற்பாடுகள் மற்றும் விதிகளும், தகுதி வாய்ந்த சான்றுகளும் புறந்தள்ளப்பட்டு, தெளிவற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற அளவுகோல்களின் அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தகைய வெளிப்படைத்தன்மையற்ற, பாரபட்சமான மற்றும் தகுதியான கலைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலை அமைப்புகள் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) அவசர முறைப்பாடு ஒன்றைச் செய்ய ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக சுட்டிக் காட்டினார்கள்.

“கலை மற்றும் இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாகும். அர்ப்பணிப்புடன் உழைக்கும் மூத்த மற்றும் தகுதியான கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் புறக்கணிப்பது, ஒட்டுமொத்த கலைஞர் சமூகத்தின் மன உறுதியைக் குலைக்கும் ஒரு கசப்பான செயலாகும். தெரிவுக் குழுவின் இத்தகைய வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் கலைஞர்களின் மதிப்பைச் சீரழிப்பதாக அமைகின்றது” எனத் தலைசிறந்த சமூகச் செயற்பாட்டாளர்களும் கலை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலை உடனடியாக நிறுத்திவைத்து, வெளிப்படையான விசாரணை மற்றும் மறுஆய்வை (Re-evaluation) மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.