இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் காணப்பட்ட பலமிக்க “அர்னாப்” சூறாவளி மேலும் தீவிரமடைந்து இன்று அதிகாலை 02.30 மணியளவில் மிகப் பலமிக்க சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 890 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி இன்று மாலை 05.30 மணி வரைக்கும் தொடர்ந்து பயணம் செய்யும். இதன் பிற்பாடு வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து நாளை காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை மிகப் பலமிக்க “அர்னாப்” சூறாவளி ஊடறுத்து செல்லககூடும்.

இதன் தாக்கம் இலங்கைக்கு நேரடியாக இல்லாத போதிலும் இத் தொகுதியுடன் தொடர்புடைய காற்றோட்டம் நாடு முழுவதிலும் பரவுவதனால் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று வரையும் தொடரக்கூடும்.

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதி கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 80 – 100 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இதேவேளை இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இக் கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 3.0 – 4.0 m உயரத்திற்கு மேலெழுவதுடன் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஆகையினால் மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். இதேவேளை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். நாட்டின் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புக்களை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். தென் மேற்குப் பிராந்தியத்தின் சில இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதால் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள்
தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான கௌரவ கலாநிதி
மொஹமட் சாலிஹீன்.