ஈரானில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம்; சவூதி, பாகிஸ்தான், துருக்கி அதிகாரிகள் பங்கேற்பு

பிராந்திய பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் துணைச் செயலாளர் அலி பகேரி (Ali Bagheri) தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் நடைபெறவுள்ள இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் (Prince Khalid bin Salman), பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் (General Asim Munir) மற்றும் துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் இப்ராஹிம் கலின் (Ibrahim Kalin) ஆகியோர் நேரில் பங்கேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதில் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மையமாகக் கொண்ட ஈரானின் அணுகுமுறையானது ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக உருவெடுத்துள்ளதாக இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அலி பகேரி சுட்டிக்காட்டியுள்ளார்.