தென் கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்!

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, தென் கொரிய நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயற்பாட்டுப் பணிச்சட்டகத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென் கொரியாவின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2023 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தது.

எனினும், குறித்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட சில ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, அதனை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஐந்து பிரதான தரப்பினரை உள்ளடக்கிய புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செயற்பாட்டுப் பணிச்சட்டகமும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்களுக்கு, தென் கொரியாவின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், கல்வியைத் தொடர்ந்து குறித்த மாகாணத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அங்கு நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென் கொரியாவின் குறித்த மாகாணம், சசோன் வணிக மற்றும் கைத்தொழில் பேரவை மற்றும் வெங்க்சின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினருக்கும் இடையில் இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செயற்பாட்டுப் பணிச்சட்டகமும் ஏற்படுத்தப்படவுள்ளன.