
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியியலாளர் அனோஜன் சிவராசாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்காகப் பங்களித்த அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்த அவர், அனோஜன் சிவராசாவின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமரப்பெரும உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தன்னாலும் தனது குழுவினராலும் இயன்ற அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்மானத்தை எடுத்த சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்திற்கும் அந்நாட்டு மன்னருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


