
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இலங்கை கந்துரட்ட இந்து குருமார் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளது.
இம்மனுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.
இதன்போது, அனோஜன் தொடர்பாகத் தேவையான அரச தலையீடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் செயலாளர் தெரிவித்தார். மேலும், இராஜதந்திர ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கைகள் தொடர்வதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.


