
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வகையில், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.நிதி அமைச்சராக ஜனாதிபதி வரவு–செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக ஒக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும். 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.இதன்மூலம் 2027ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற வரவு–செலவுத் திட்ட செயற்பாடுகள் நிறைவடையும்.இந்த அட்டவணை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரவு–செலவுத் திட்ட காலப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து சனிக்கிழமைகள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்வு நாளிலும் நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும்.இரண்டாம் வாசிப்பு விவாதத்தின்போது, விவாதத்திற்கான மொத்த நேரத்தில் 60% அரசாங்கத்திற்கும், 40% எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்படும்.குழுநிலை விவாதத்தின்போது இந்த விகிதம் மாற்றப்பட்டு, 40% அரசாங்கத்திற்கும், 60% எதிர்க்கட்சிக்கும் விவாத நேரம் ஒதுக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


