27-வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 27-வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (செப்டம்பர் 25) தொடங்குகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 10 நாள் புத்தகக் கண்காட்சி, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 04 வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, இம்முறை சுமார் 70 முன்னணி உள்ளூர் பதிப்பாளர்களும் 32 சர்வதேச பதிப்பாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். கண்காட்சியின் போது பார்வையாளர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் புத்தகங்களை சிறப்புத் தள்ளுபடியில் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், புதிய புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகள் மற்றும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.பார்வையாளர்களின் வசதிக்காக இம்முறை ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு (Online Ticketing) பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்பதிவு செய்து, BMICH வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நுழைவாயில்களில் QR குறியீட்டைப் பயன்படுத்தி விரைவாகச் செல்ல முடியும்.இதனிடையே, புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் பொலித்தீன் பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.