
சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நேற்று மாலை (23) கொழும்பிலுள்ள வீரகேசரி அலுவலகத்தில் வைத்து, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையிலான குழுவினர் இவ்வறிக்கையை நேரடியாகச் சென்று வழங்கி வைத்தனர்.இக்குழுவில் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின், அமைப்பின் உறுப்பினரும் ஸ்கை தமிழ் மற்றும் ஸ்கை லங்கா நியூஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.எம். வாசித் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இத்திட்டம் குறித்து ஊடக வாயிலாக தான் ஏற்கனவே அறிந்ததாகவும் இத்திட்டத்தின் வெற்றிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் இதன்போது குறிப்பிட்டார்.


