திருகோணமலை விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகள்!

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட SMART Irrigation System Project திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகள் மற்றும் அது சார்ந்த நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் குச்சவெளி, நிலாவெளி, மூதூர், வான்எல, கிண்ணியா, சம்பூர் மற்றும் பதவி ஸ்ரீபுர ஆகிய விவசாய சேவை நிலையங்களுக்கு உட்பட்ட 48 விவசாயிகள் இதுவரை பயன்பெற்றுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான விவசாயிகள் தமது பயிர் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு டீசல், மண்ணெண்ணெய் அல்லது மின்சாரத்தில் இயங்கும் நீர் பம்பிகளையே பயன்படுத்தினர். இதனால் எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுகள், பராமரிப்புச் சிக்கல்கள் மற்றும் போதிய நீர் விநியோகம் இன்மையால் பயிரிடக்கூடிய நிலத்தின் அளவும் வருமானமும் வரையறுக்கப்பட்டிருந்தன.