
MUTUR JMI Pvt Ltd நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவையும் வாசிப்பு மாதத்தையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட JMI MUTUR EXPO – 2026 நிகழ்வு, 2026 ஒக்டோபர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் மூதூர் பேர்ல் கிராண்ட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
JMI நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. எம். ஐ. இஹ்ஸானின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலக்கிய ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி, ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சி, உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் முதலாம் நாளான ஒக்டோபர் 24ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் 60 எழுத்தாளர்களின் 60 நூல்கள் ஆறு இலக்கிய ஆய்வரங்குகளின் ஊடாக வெளியிட்டு வைக்கப்பட்டன. இலங்கையின் முன்னணி 12 ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பங்கேற்ற இவ்வாய்வரங்குகளில், இலக்கியப் படைப்புகள் தொடர்பான ஆய்வுரைகளும் இடம்பெற்றன. அத்துடன், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புத்தகங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் இரண்டாம் நாளான ஒக்டோபர் 25ஆம் திகதி மாலை நடைபெற்ற பிரதான நிகழ்வில், இலக்கியம், சமூக சேவை, ஊடகம், தொழில்முனைவோர் துறை மற்றும் மூத்த பிரஜைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த 200-க்கும் மேற்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் சிற்றிதழின் பிரதம ஆசிரியர் ஆமீன் கலந்துகொண்டார்.
இதன்போது, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே. எம். பாஸித், துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஹப்ஸா பஹுமீர், துணிந்தெழு சஞ்சிகையின் இணையாசிரியர் ஜவ்ஸன் அஹமட், ஸ்கை தமிழ் உறுப்பினர் மொஹமட் இல்ஹாம் மௌலவி, துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் மஜீனா உமறு லெவ்வை மற்றும் ஸ்கை தமிழ் உறுப்பினர் ஸஞ்ஸீதா முஜீப் ரஹ்மான் ஆகிய ஆறு பேருக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இந்நிகழ்வில் ஜவ்ஸன் அஹமட் எழுதிய ‘நரை விழுந்த காதல்’ எனும் கவிதை நூலும், ஸஞ்ஸீதா முஜீப் ரஹ்மான் எழுதிய ‘நான்கு சுவருக்குள்’ எனும் நாவல் நூலும் வெளியீடு செய்து வைக்கப்பட்டன. அத்துடன், கவிதை, சிறுகதை மற்றும் வினா–விடைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், இலக்கிய ஆய்வாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
MUTUR JMI Pvt Ltd நிறுவனத்தின் பத்தாண்டு காலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற JMI MUTUR EXPO – 2026, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், இலக்கியம், கலை, கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுவோரின் திறமைகளையும் பங்களிப்புகளையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வுக்கு ஸ்கை தமிழ் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


