சென்னையில் நடிகர் அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர் மன்றம்!

சென்னை மாங்காடு அருகே உள்ள கோவூரில், ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அமைப்பின் சார்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.

அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பாபு தலைமையில் இந்த முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. நடிகர் அஜித்தின் அச்சு அசலான உயரத்திலேயே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலைக்குப் பிரம்மாண்டமான முறையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, சிலைக்கு மாலையணிவித்து மகா ஆரத்தி எடுக்கப்பட்டது.
இந்த சிலாபிஷேக வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றன.

சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பாபு, தங்களது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ‘இந்தச் சிலையைச் செய்வதற்கு எங்களுக்கு 3 மாதங்கள் ஆனது.

2031-ஆம் ஆண்டு எங்களின் முதல்வர், உங்களின் முதல்வர், சமத்துவ முதல்வர் அஜித் தான்! அடுத்தகட்டமாக எங்கள் கட்சியை முறைப்படி பதிவு செய்யவிருக்கிறோம். அதற்கு எங்களின் ஒரே தலைவரான அஜித் வர வேண்டும். எங்கள் கட்சிக்குத் தலைவர், பொதுச்செயலாளர் எல்லாமே அஜித்தான், நாங்கள் வெறும் உறுப்பினர்கள் மட்டுமே.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்துப் பேசிய அவர், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதில் தவறில்லை.

ஆனால் அரசியல் களத்தில் விஜய்யை எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் அஜித்தான். அஜித் குமார் களமிறங்கும்போது அவருக்கு முன்னால் எதுவும் நிற்காது,” என்று சவால் விடுத்துள்ளார்.