
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகி டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி, நகர ஊரமைப்புத் துறை (DTCP) ஒப்புதல் மற்றும் பிற அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பதிவு செய்யப்படாத அமைப்பின் பெயரில் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்ட பணத்துக்கு உரிய அனுமதிகளைப் பெற்றுத் தரவில்லை என்றும், பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.


