
நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் இன்று (ஒக்டோபர் 26) காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால், கேசல்கமு ஓயா மற்றும் களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நீர்மட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


