
இலங்கையின் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமைக்குப் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி காரணமல்ல என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி முதல் மின் உற்பத்தி இயந்திரங்களுக்குப் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியே பயன்படுத்தப்படுவதாகவும், அதன் தரம் தொடர்பில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக 62 நாட்கள் செயலிழந்திருந்த முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் செப்டெம்பர் 4ஆம் திகதி மீண்டும் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாளை முதல் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


