
கே எ ஹமிட் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் (9) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள காணி உத்தியோகத்தர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள LRC காணிகள் மற்றும் தீகவாபி கிராம மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். காணி உத்தியோகத்தர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமையால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வருகின்ற காணி தொடர்பான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த காணி ஆணையாளர் நாயகம் திரு சந்தன ரணவீர ஆராச்சி, குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் அறிவித்தல் 2026.06.26ஆம் திகதியன்று 2024/249ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேற்படி போட்டிப் பரீட்சையை நடத்தி அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரிகளைத் தெரிவுசெய்து அம்பாறை காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் தீகவாபி கிராம மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விசேட நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காணி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, குடியேற்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வேறு அலுவலகங்களிலிருந்து தற்காலிக அடிப்படையில் குடியேற்ற உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்கவுக்கு அமைச்சர் லால் காந்த பணிப்புரை வழங்கினார்.


