400 பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார கார்கள்! 65,000 பேருக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்க அரசு திட்டம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக 400 மின்சார கார்கள் வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) பதவிக்கு மேற்பட்ட 400 அதிகாரிகளுக்கு இந்த மின்சார கார்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், ASP பதவிக்கு கீழ் உள்ள சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனுடன், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு 134 காப் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 காப் வாகனங்களுக்கான ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய பொலிஸ் தலைமையகம் அமைப்பதற்கும், 800 கோடி ரூபாய் செலவில் பொலிஸ் வைத்தியசாலையை நவீனமயப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2027 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்து கொடுப்பனவு வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.