70 மில்லியன் ரூபாய் இலஞ்ச குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளது.

ஆணைக்குழு அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று இந்த வாக்குமூலத்தைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.