
இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மூவின ஊடகவியலாளர்களின் நலன், எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்புரிச் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இன்றைய தினம் (23) கொழும்பில் அமைந்துள்ள வீரகேசரி பத்திரிகை நிறுவன வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.வி.எம். பைறூஸ் அவர்களிடம் இத்திட்ட முன்மொழிவு அறிக்கை கையளிக்கப்பட்டது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில், மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின் மற்றும் அமைப்பின் உறுப்பினர் ஜே.எம். வாசித் ஆகியோர் இணைந்து இவ்வறிக்கையை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
நாடளாவிய ரீதியில் இயங்கும் ஊடகவியலாளர்களின் அவசர தேவைகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்புரித் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கு இப்புதிய நம்பிக்கை நிதியம் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


