
சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நேற்றிரவு (23) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையிலான குழுவினர் இவ்வறிக்கையை நேரடியாகச் சென்று வழங்கி வைத்தனர்.
இக்குழுவில் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின், அமைப்பின் உறுப்பினர் ஜே.எம். வாசித் மற்றும் ஸ்கை லங்கா நியூஸ் முகாமையாளர் ஆசிக்கா பர்ஸான் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களின் உடல் நலன் குறித்தும் சிலோன் மீடியா போரத்தின் குழுவினர் கேட்டறிந்தனர்.
#திட்ட_முன்மொழிவைப்_பெற்றுக்கொண்டு #கருத்துத்_தெரிவித்த_என்_எம்_அமீன்:
“ஊடகவியலாளர்களின் அவசர தேவைகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்புரித் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கு இப்புதிய நம்பிக்கை நிதியம் பெரும் பக்கபலமாக அமையும். அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய இத்திட்ட வெற்றிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.


