
புகையிரத ஊழியர்களால் 48 மணிநேர பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் வழமை போன்று சேவையில் ஈடுபட்டதாகப் புகையிரதப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரதப் பொது முகாமையாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (செப்டம்பர் 16) நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர ஜயசேகரவிற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதத்தை இடைநிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆசிறி கருணாவர்தன அறிவுறுத்தியிருந்த போதிலும், இப்போராட்டம் தொடர்கின்றது.
எனினும், இப் பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் தமக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் புகையிரத சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டமை குறித்துப் பயணிகள் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.


