
டெரண கொழும்பு சர்வதேச பட்டம் விடும் திருவிழா 2026 எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கலாசார மற்றும் சுற்றுலா நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இம்முறை 30 நாடுகளைச் சேர்ந்த 80 சர்வதேச பட்டம் விடும் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிரதான நிகழ்வு பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இலங்கையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்படும் இரவு நேர பட்டம் விடும் திருவிழா மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும். இதன்போது கொழும்பு வானில் ஒளிரும் பட்டங்கள் பறக்கவிடப்படவுள்ளன.
அதன் பின்னர், இலங்கை கலைஞர்கள் பலர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி அவதார் இசைக்குழுவின் இசை ஆதரவுடன் இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளது.மேலும், காலி முகத்திடலுக்கு எதிரே, ஷங்ரி-லா கொழும்பு முன்பாக டெரண கொழும்பு உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இம்முறை பட்டம் விடும் திருவிழா ஒரு நாள் நிகழ்வாக மட்டுப்படுத்தப்படாமல், ஒரு வார கால நிகழ்ச்சித் தொடராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிபுணர்களால் நடத்தப்பட்ட பட்டம் தயாரித்தல் மற்றும் பட்டம் விடுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட 630க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனுடன், சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு, சுமார் 200 பழமையான மற்றும் கிளாசிக் வாகனங்கள் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.மேலும், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்காக கொழும்பு போர்ட் சிட்டியில் விசேட பட்டம் விடும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2026ஆம் ஆண்டுக்கான திருவிழாவின் விசேட கலாசார கருப்பொருளாக கண்டி எசல பெரஹெரா தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பங்கேற்பாளர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏழு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த திருவிழா, 2025ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் 21 நாடுகளைச் சேர்ந்த 54 சர்வதேச பட்டம் விடும் வீரர்களும், 1,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை திருவிழா இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் கூட்டாண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மற்றும் இலங்கையை சர்வதேச சுற்றுலா தலங்களாக மேலும் பிரபலப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.


