அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பகிரங்கப்படுத்தப்படும்: ஜனாதிபதி அநுர உத்தரவு

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்கள் தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சுமார் 160,000 பேர் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் அரச சபைகளில் உள்ள தனியார் துறை நிபுணர்களின் தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) பாதிக்கப்படுவதாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்தே ஜூலை 24 வர்த்தமானியில் திருத்தம் முன்மொழியப்பட்டது.

எனினும், மக்கள் பிரதிநிதிகளைக் கண்காணிக்கும் பொதுமக்களின் உரிமையைப் பாதுகாக்க அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பகிரங்கப்படுத்தப்படும் என்றும், அரசியல்சாரா அதிகாரிகளுக்கு மட்டும் தனியான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.