தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வுப் பட்டறையில் இளம் ஆய்வாளர் முஜிபுர் ரஹ்மான் பாத்திமா ஸஞ்ஸீதாவின் ஆய்வுக்கட்டுரை தெரிவு!

ஜவ்சன் அஹமட் – மருதமுனை

கிழக்கு மாகாணம் திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் முஜிபுர் ரஹ்மான் பாத்திமா ஸஞ்ஸீதா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தால் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் பல்துறை சார்ந்த சக மதிப்பாய்வு மற்றும் நடுவர் தீர்ப்பு பெற்ற ஆய்விதழான Kalam International Research Journal-இன் ஆய்வுப் பட்டறைக்கு தனது ஆய்வுக்கட்டுரையை வெற்றிகரமாகச் சமர்ப்பித்துள்ளார்.

“1990க்குப் பின்னரான இலங்கை முஸ்லிம்களின் தமிழ் புதுக்கவிதைகளில் மத, கலாச்சார அடையாளங்களின் பிரதிபலிப்பு ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வில் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க வளர்ந்து வரும் பல்வேறு புதுக்கவிதையாளர்களின் கவிதைகள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க ஆய்விதழுக்கு இக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டிருப்பது அவரது எதிர்கால கல்விசார் நடவடிக்கைகளுக்கு உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாத்திமா ஸஞ்ஸீதா தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவியாவார், புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவியான இவர், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தற்போது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

பல்துறை எழுத்தாளரான இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வார இதழ்கள் மற்றும் பல்வேறு தொகுப்பு நூல்களில் கவிதைகள், கட்டுரைகள், நூல் வாசிப்பனுபவங்கள், ஆளுமை நேர்காணல்கள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தனது படைப்புகளை வெளியிட்டு வரும் இவர், “கவிச்சாரல்” என்ற யூடியூப் தளத்தையும் இயக்கி வருகிறார்.

சாதனையாளர் விருது, கவிச்சிகரம் விருது, சிறந்த நெறியாளர் விருது, சிறந்த தொகுப்பாளினி விருது, திறனொளி விருது, எஸ்.எல்.பி.சி. அவார்ட், முன்மாதிரி மாணவி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கைப்பணி வேலைப்பாடுகள், சித்திரம் வரைதல், பேச்சாற்றல், விழிப்புணர்வு கதையாக்கம், நாடகம் இயற்றுதல், தொகுப்புகளைத் திறம்படச் செய்தல் போன்ற பல்திறமைகளாலும் அறியப்படுகிறார்.

தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுக்கொண்டு இளம் வயதிலேயே ஆய்வுக் களத்தில் முத்திரை பதித்து வரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.