
இலங்கையில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பாரிய அளவில் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 58,810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3,422 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணம் 30,876 நோயாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட ரீதியில் கொழும்பில் 12,017 பேரும், கம்பஹாவில் 11,740 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 142 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிவேக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


