ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கான ஒரு வருட பயிற்சி நியமனங்கள் வழங்கி வைப்பு!

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் 402 பேருக்கான உள்ளகப்பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப் பின்பட்டப்படிப்பு கல்வி பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆயுர்வேத பட்டதாரிகள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடம், கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடம் ஆகியவற்றில் ஐந்து வருட பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களாவர். மேலும், இவர்கள் 2017–2018 கல்வியாண்டுகளுக்குரிய கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகும்.

விசேட மருத்துவ நிபுணர்களின் கீழ் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் இல்லாத வைத்தியசாலைகளில் வாட்டுகளுக்குப் பொறுப்பான முதலாம் தரத்தைச்சேர்ந்த மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் செயல்படும் வைத்தியசாலைகள் என்பவற்றில் ஒரு வருட கால உள்ளகப்பயிற்சியை பெறவுள்ளனர். இந்த 402 பட்டதாரிகளில், 249 பேர் ஆயுர்வேதத் துறையிலும், 109 பேர் சித்தத் துறையிலும், 44 பேர் யுனானித் துறையிலும் உள்ளகப் பயிற்சி பெற உள்ளனர்.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத திணைக்களத்தின் ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன, தேசிய சுதேச மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் விமர்ஷன சதுரங்க மற்றும் மருத்துவப் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.