சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க ‘வீட்டுக் காவல்’ சட்டமூலத்தை விரைவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல்!

சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், பொருத்தமான சந்தர்ப்பங்களில் சிறைத் தண்டனைக்கு மாற்றாக ‘வீட்டுக் காவலை’ (Home Detention) அனுமதிக்கும் சட்டமூலத்தை விரைவாக தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதியான சந்தேகநபர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்களை விளக்கமறியலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பதற்கான ஆரம்பக் கட்ட வரைவு, சட்ட வரைஞரால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2025 ஜூன் 23 ஆம் திகதி வழங்கப்பட்ட அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மறுபரிசீலனையில், மேலும் சில புதிய சரத்துகளை இணைக்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது.

இதற்கமைய, அந்த கூடுதல் சரத்துகளையும் உள்ளடக்கி சட்டமூலத்தை விரைவாக பூர்த்தி செய்யுமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.