தேசிய விருது பெற்ற நூருல் ஹுதா உமருக்கு மருதமுனையில் சிறப்பு கௌரவம்

✍️ எம்.ஜே.ஜவ்சன் அஹமட்

தமிழன் பத்திரிகையினால் “சிறந்த விபரணக் கட்டுரைக்கான தேசிய விருது” வழங்கப்பட்ட எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், மருதமுனையில் நடைபெற்ற இலக்கிய–சட்டத்துறை முன்னோடிகள் கூடிய சிறப்புவேந்த அவையில் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வு, சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் கவிஞர் அலறி றிபாஸ் எழுதிய “தந்தனக்கிளி” நூலின் வெளியீட்டினை முன்னிட்டு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது. விழா கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். எஸ். எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.

நூருல் ஹுதா உமரின் சமூக பொறுப்புள்ள விபரணக் கட்டுரைகள் தமிழ் எழுத்துலகில் தரநிலையையும் நோக்கத்தையும் உயர்த்தியமை வலியுறுத்தப்பட்ட நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. எம். ஏ. ஜவாத், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ். எம். சபீஸ் ஆகியோர் இணைந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பணப்பரிசும் வழங்கினர்.

இவ்விருது, இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் ஒரு முன்னுதாரணமாகவும், சமூக மாற்றத்தை நோக்கி எழுதப்படும் கட்டுரைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் அமைந்துள்ளதாக விழாவில் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் இலக்கிய விமர்சகர் மன்சூர் ஏ காதிர், இலக்கிய விமர்சகர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிராஜ் மசூர், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஆரிகா ஷரீக் காரியப்பர், சிரேஷ்ட–கனிஷ்ட சட்டத்தரணிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பல இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.