
இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானகவை நியமிக்க பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று (19) இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சரித் அசலங்க இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணியின் தலைவராக செயல்பட்டார், ஆனால் பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு T20 தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் அந்த தொடரில் தசுன் ஷானக பதில் தலைவராக செயல்பட்டார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் வரை இலங்கை T20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயல்படுவார் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக இதற்கு முன்னரும் இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணியின் தலைவராக செயல்பட்டுள்ளார், மேலும் அவரது தலைமைத்தவத்தின் கீழ் தான் 2022 ஆசியக் கிண்ணத்தையும் இலங்கை அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக 25 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை குழாமும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், உபுல் தரங்க தலைமையிலான கடந்த தேர்வுக்குழுவினால் T20 உலகக் கிண்ணத்திற்காக பெயரிடப்பட்டிருந்த 25 பேர் கொண்ட குழாம் தான் எவ்வித மாற்றங்களும் இன்றி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் இலங்கை அணியில் தொடர்ச்சியாக விளையாடிவரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருசில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் இளம் வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், டிரவீன் மெதிவ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோருக்கு இந்த குழாத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சஹான் ஆராச்சிகே, பிரமோத் மதுசான் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும், இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்திலிருந்து, T20 உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இறுதிக் குழாம் தெரிவுசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


