இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக மீண்டும் பிரமோத்ய விக்ரமசிங்க நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு அவர் நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2021 முதல் 2023 வரை அவர் தேர்வுக் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

விளையாட்டு அமைச்சரால் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இந்திக டி சேரம், தரங்க பரணவிதான, வினோதன் ஜோன் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39-1 பிரிவின்படியும், 2437/24 2025 மே 21 சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படியும், விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்கள் கொண்ட உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய தேர்வுக் குழுவின் பதவிக் காலம் டிசம்பர் 12ஆம் திகதியுடன் நிறைவடைந்ததனை அடுத்தே பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான குழு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதனிடையே, தரங்க பரணவிதான மற்றும் இந்திக டி சேரம் ஆகிய இருவரும் முன்னர் காணப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான தேர்வுக்குழுவிலும் உறுப்பினர்களாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.