ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்ட மூன்று இலங்கை வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இண்டியன் பிறீமியர் லீக்கின் 19ஆவது அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் நேற்று (16) அபுதாபியில் நடைபெற்றதுடன், இதில் இலங்கை அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதன்படி, 2023 முதல் 2025 வரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பதிரனவை ஏலம் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. எனினும், இவர்களுடன் போட்டியில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மதீஷ பதிரனவை ரூ.18 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது. இது இலங்கை பணப்பெறுமதியில் கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

மறுபுறத்தில் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, மதீ{விற்கு முன்னர் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க ஆவார். அவரை 2022ஆம் ஆண்டு றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி; 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தது. அதேபோல, லசித் மாலிங்க (2011இல் 9 கோடி), நுவன் துஷார (2024இல் 4.8 கோடி), டில்ஷான் மதுஷங்க (2024இல் 4.6 கோடி), அஞ்சலோ மெத்யூஸ் (2011இல் 4.4 கோடி), சனத் ஜயசூரிய (2008இல் 4.2 கோடி) மற்றும் மஹீஷ் தீக்ஷன (2022இல் 4 கோடி) ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் 4 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட ஏனைய இலங்கை வீரர்கள் ஆவர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான கெமரூன் கிரீனை 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கெமரூன் கீரீன் படைத்தார்.

இந்த வகையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது கேமரூன் கிரீன் முறியடித்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை வாங்கப்பட்ட 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த வகையில் ரிஷப் பந்த் (ரூ.27 கோடி), ஸ்ரேயஸ் ஐயர் (ரூ.26.75 கோடி) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில், முதல் தடவையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் எதிர்பார்ப்புடன் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் போட்டியிட்ட இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்கவை 4 கோடி இந்திய ரூபாவுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது. இது இலங்கை பணப்பெறுமதியில் 13.61 கோடி ரூபாவாகும்.

இதேபோன்று இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கவை அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபாவுக்கு லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது இலங்கை பணப்பெறுமதியில் 7 கோடி ரூபாவாகும்.

இதேவேளை, ஐபிஎல் அரங்கில் முன்னணி வீரராக வலம்வந்த இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவை இம்முறை ஏலத்தில் வாங்க எந்தவொரு அணியும் முன்வரவில்லை.

இதன்படி நேற்று முடிலடைந்த வீரர்கள் ஏலத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மதீஷ பதிரன (சென்னை), பெதும் நிஸ்ஸங்க (டெல்லி), வனிந்து ஹசரங்க (லக்னோவ்), நுவன் துஷார (ஆர்சிபி), எஷான் மாலிங்க (சன்ரைசர்ஸ்), கமிந்து மெண்டிஸ் (சன்ரைசர்ஸ்) மற்றும் துஷ்மந்த சமீர (டெல்லி) உள்ளிட்ட ஏழு இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர்.