
இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு விமானம் இன்று (09) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இவ்விமானம் ஐக்கிய அரபு அமீரக விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து விமானங்களில் ஒன்றான C-17 ரக விமானமாகும்.அபுதாபியிலிருந்து வருகை தந்த இவ்விமானத்தில் 27 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்த உணவுத் தொகுதியில், 8 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு 14 நாட்களுக்குப் போதுமான உணவு அடங்கிய 1,080 பொதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதேவேளை, இந்தியாவிலிருந்தும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு விமானம் இன்று (09) பிற்பகல் 1.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 ரக மிகப்பெரிய சரக்கு விமானம் இந்நிவாரணங்களை கொண்டு வந்துள்ளது. இவ்விமானத்தின் மூலம் 61 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான இரும்புப் பாலம் (Bailey bridge) ஒன்றும், 600 கிலோகிராம் எடையுள்ள மருந்துப் பொருட்களும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.


