
கொழும்பு: முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை ஊழல் அல்லது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைக்காக ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவ காப்புறுதி ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
அந்த நிறுவனங்கள் — இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணையம், இலங்கை சுற்றுலா விளம்பர ஆணையம், இலங்கை ஹோட்டல் மேலாண்மை நிறுவகம் மற்றும் இலங்கை மாநாட்டு அலுவலகம் என குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகளின் போது, “My Insurance Brokers” என்ற தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக காப்புறுதி முகவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம், இலங்கை காப்பீட்டுக் கூட்டுத்தாபனத்திடம் ரூபா 47,50,828.72 கமிஷன் தொகை அந்த தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.


