
(எம்.பஹத் ஜுனைட்)
ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினுடைய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட எம்.பி. எம் பைரூஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (20)பாசிக்குடா சன்றே ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்திய அமைப்பாளர் ஏ.எல்.ஏ. ஷிப்லி (ஆசிரியர்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் தேசிய தலைவர் அஷ் ஷேக். எம்.எச்.எம். உஷைர் (இஸ்லாஹி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள் .
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய எம்.பி.எம். பைறூஸ் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்தின் ஊடக நிலைமைகள் பற்றியும் அவற்றிலே செய்ய வேண்டிய மாற்றங்கள் புதிய அணுகுமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவான ஒரு விளக்கத்தையும் வழங்கி இருந்தார்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமிக்கும் அவருக்கும் இடையிலான நீண்ட உறவு பற்றிய வரலாற்று அம்சங்களையும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட உறுப்பினர்களும் பெண்கள் பகுதி சகோதரிகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதின் ஊடாக எவ்வாறான மாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது சம்பந்தமாகவும் இஸ்லாமிய வரலாற்றில் ஊடக முறைமையின் அவசியம் உணரப்பட்டிருந்த காலம் பற்றியும் அதன் வரலாற்று அம்சங்கள் பற்றியும் ஒரு தெளிவான உரையினை ஜமா அத்தின் தேசிய தலைவர் அவர்கள் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


