
தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில், தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின்போது பெரிய மரச் சிலுவை தலையில் விழுந்ததில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவாயாகில் நகரிலுள்ள ‘பெர்பெத்துவோ சொக்கோரோ’ தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பெட்ரிசியோ சாஞ்செஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பலிபீடத்தின் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரென கழன்று அவரது தலையில் விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்போது வழிபாடு சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால், விபத்துக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. பாதிரியாரின் மறைவுக்கு குவாயாகில் பேராயர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக இரங்கல் தெரிவித்துள்ளது. சிலுவை விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


