
ஜப்பானில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச சுற்றுலா கண்காட்சிகளுள் ஒன்றான ‘JATA Tourism Expo Japan 2026’ கண்காட்சியின் இலங்கை அரங்கு, தூதுவர் பேராசிரியர் பவித்ரு ஜனக் குமாரசிங்க அவர்களின் பங்கேற்புடன் கடந்த 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி செப்டம்பர் 24 முதல் 27 வரை டோக்கியோவில் உள்ள ‘Tokyo Big Sight’ வளாகத்தில் நடைபெறுகிறது.
இலங்கை இக்கண்காட்சியில் 12 ஆவது முறையாக பங்கேற்பதுடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் 22 சுற்றுலா நிறுவனங்கள் இணைந்து நாட்டின் தனித்துவமான சுற்றுலாத்தலங்கள், செழுமையான கலாச்சாரம், வனவிலங்கு வளங்கள், தூய்மையான கடற்கரைகள், ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் மறக்க முடியாத சுற்றுலா அனுபவங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளன.
இலங்கை அரங்கானது, ஜப்பானிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் விருந்தோம்பல், அழகியல் மற்றும் பன்முகத்தன்மையை நேரில் அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.இப்பங்கேற்பானது ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகமும் (SLTPB) இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


