ஹெட ஓயா மற்றும் அம்பாறை வடிச்சல் திட்டங்களுக்கு விரைவில் தீர்வு!

ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம், சம்புக்களப்பு – பெரிய களப்பு வடிச்சல், கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்கள் தொடர்பான விசேட கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு லால் காந்த தலைமையில் இன்று (23) பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் அமைச்சர் லால் காந்த அவர்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையை கூட்டத்தின் நோக்கம் தொடர்பாக உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம், சம்புக்களப்பு – பெரிய களப்பு வடிச்சல் திட்டம் மற்றும் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்களால் அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நெற் காணிகள் (உறுதிக்காணிகள்) சேனநாயக்க சமுத்திரம் ஆரம்பிக்கப்பட்டதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் 8,500 ஏக்கர் சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய காணிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன், கரைவாகுப்பற்று வடிச்சல் நிறைவு செய்யப்படாததால் சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களில் 12,500 ஏக்கர் காணிகள் நீண்ட காலமாக நீரில் மூழ்கி வருகின்றன.

இவ்வடிச்சல் திட்டங்களை நிறைவு செய்வதோடு ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை நிறைவு செய்வதால் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ, அம்பாறை மாவட்டத்தில் லஹுகல, பானம, பொத்துவில், கோமாரி வரையிலான பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை நிறைவு செய்ய முடியும். அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான நெற் காணிகள் 02 போகங்கள் நெற் பயிர்ச்செய்கை செய்யும் நிலைமை உருவாகி தேசிய மட்டத்தில் அம்பாறை மாவட்டம் 40% வீதமான நெல் உற்பத்தியை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே, இம்மூன்று திட்டங்கள் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகை தந்த கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடம் கௌரவ பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரும், நானும் ஒன்றிணைந்து இம்மொழிவினை முன்வைத்தோம். ஜனாதிபதி அவர்கள் நீண்ட நேரம் விபரங்களை கேட்டறிந்து இம்மூன்று திட்டங்களுக்கான ஆரம்பப் பணியினை மேற்கொள்ளுமாறும் இதற்கான நிதியினை வழங்குவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார். இதன்பின் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நீர்ப்பாசன அமைச்சின் உயர் அதிகாரிகளும், நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு விசேட கூட்டங்கள் நடைபெற்றன.

அம்பாறை, மொனராகலை மாவட்ட மக்களின் மிக முக்கியமான தேவையினை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் அமைச்சர் லால் காந்த அவர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, எங்கள் கோரிக்கையினை ஏற்று விசேட கூட்டத்தினை ஏற்பாடு செய்த கௌரவ அமைச்சர் லால் காந்த அவர்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சம்புக்களப்பு – பெரிய களப்பு, கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்கள் ஊடாக அம்பாறை மாவட்ட மக்கள் பெரும் நன்மையடைவார்கள் எனவே, இத்திட்டங்களை மக்கள் நலனுக்காக நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் தனது கருத்தில் இம்மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்படுமாயின் எமது அம்பாறை மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் அவர்கள் தனது கருத்தில் ஹெட ஓயா திட்டம் பற்றியும் அதன் ஆரம்ப முயற்சிகள் பற்றியும் அதில் எதிர்நோக்கப்பட்ட சிக்கல்கள் குறித்தும் அத்தகைய சிக்கல்களை தீர்க்க எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முயற்சிகள் தொடர்பாகவும் எங்கிருந்து இம்முயற்சிகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்றும் எவ்வாறு பிணக்குகளை தவிர்த்து இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடங்க முடியும் என்பது பற்றியும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் தெரிவித்ததுடன், முதலில் ஹெட ஓயா திட்டத்திற்கான திட்ட அலுவலகம் (Project Office) ஒன்றை நிறுவி இப்போது இருந்தே ஆரம்ப வேலைகளை தொடங்குவது குறித்தும் பாரிய நிதித்தேவையுடைய இத்திட்டத்திற்கான வெளிநாட்டு கடனை பெறுவது IMF நிபந்தனையின் பிரகாரம் இப்போது சாத்தியம் இல்லை அதனால் இவ்வருடம் அமைச்சராவையில் ஜனாதிபதியால் ஒரு கருத்தாக்க அறிக்கை (Concept Paper) சமர்ப்பிக்கப்பட்டு இந்த வருட வரவு-செலவு திட்டத்தில் 60 அல்லது 70 மில்லியன் நிதியினை ஒதுக்கி ஒரு ஆரம்ப நம்பிக்கையை உருவாக்குவது பொருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தனது உரையில், தான் கல்முனை மாநகர சபையின் மேயராக பதவி வகித்த காலத்தில் இருந்து கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டம் தொடர்பான விடயங்களை நீர்ப்பாசன திணைக்களத்தில் முன்வைத்ததாகவும் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டம் கிட்டங்கிப் பாலம் வரை ஒரு அளவிலும் கிட்டங்கி பாலத்திற்கு அப்பால் வேறொரு அளவிலும் உள்ளது. இதற்கான தற்காலிகமான ஏற்பாடுகளை செய்துவிட்டு நிரந்தரமான முறையில் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டத்தினை நிறைவு செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான நெற் காணிகளை மீட்டெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், திட்டத்தினூடாக சியம்பலாண்டுவ, லஹுகல, பொத்துவில், பானம, கோமாரி பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இத்திட்டத்தினூடாக இம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன் இப்பிரதேசங்களில் அமைந்துள்ள விவசாய காணிகள் ஒரு வருடத்திற்கு 02 போகங்கள் விவசாயம் செய்யும் காணிகளாக மாறும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷாரப் முதுநபீன் தனது கருத்தில் , ஹெட ஓயா திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளித்தார். ஹெட ஓயா அபிவிருத்திக் குழு, சம்புக்களப்பு – பெரிய களப்பு விவசாயி அமைப்பு, கரைவாகுப்பற்று வடிச்சல் திட்ட விவசாய அமைப்பினரின் கருத்துக்களையும் அமைச்சர் கேட்டறிந்தார். இத்திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து மீண்டும் ஒரு விசேட கூட்டத்தினை கூட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விஷேட கூட்டத்தில் காணி பிரதி அமைச்சர் திரு.அரவிந்த செனரத் விதாரன, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வழுவூட்டல் பிரதி அமைச்சர் திரு. வசந்த பியதிஸ்ஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஆதம்பாவா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் PC, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.ஏ.எம். தாஹிர், கே. கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், கமத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் முஜிபுர் ரஹ்மான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அனுபம மங்கள விக்ரமாரச்சி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஏ.எல்.ஐ. பானு, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் திரு. சாந்த பண்டார, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திரு. பாரதிதாஸ், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஜயவீர, நீர்ப்பாசன பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) திருமதி. எப்.சி.என். விக்கிரமசிங்க, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. பண்டார, நீர்ப்பாசன திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. வெலிக்கஸ்வத்த, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உயர் அதிகாரிகள், சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நசீல், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ரி.திரவியராஜ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப், காரைதீவு பிரதேச செயலாளர் திரு. ஜி. அருள்ராஜ், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.சி.ரஸ்ஸான் மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், ஹெட ஓயா திட்டத்தின் அதிகாரிகள், சம்புக்களப்பு – பெரிய களப்பு விவசாய அமைப்பினர், கரைவாகுப்பற்று விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பி.ப. 12.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்விஷேட கூட்டம் பி.ப. 2.00 மணி வரை நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல்களுடன் தீர்மானங்களும் எடுக்கப்பட்டு நிறைவு பெற்றது.