
மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதை இலகுபடுத்தும் வகையில், முக்கிய கொள்கை மாற்றங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரைத்துள்ளது.
போக்குவரத்து பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஆரம்பக் கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டன.
பார்வை மற்றும் செவிப்புலன் குறைபாடுள்ளவர்களுக்கான தகுதிகளை விரிவுபடுத்துதல், மாவட்ட மட்டத்தில் மருத்துவப் பரிசோதனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப வாகனங்களை மாற்றியமைப்பதற்கான தெளிவான வழிகாட்டல்களை உருவாக்குதல் என்பனவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சைகை மொழி பெயர்ப்பாளர்களின் சேவையைப் பயன்படுத்துதல், சிறப்பு அடையாளக் குறியீடுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI), மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) இடையிலான டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும் குழு வலியுறுத்தியுள்ளது.


