முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஷானக்க சமரதிவாகர

மல்வத்த வெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷானக்க சமரதிவாகர, இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பினேஷ் பனன்வல, இச்சங்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சம்மேளனத்தின் 172ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிரதம அதிதியாகவும், இலங்கை தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபயசேகர கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

சமரதிவாகர, தனது அறிமுக உரையில், பெருந்தோட்டத்துறைக்கான ஐந்து அம்ச தொலைநோக்கு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். இது மதிப்புக்கூட்டல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிலப் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன், நீர்ப்பாசனம் மற்றும் நீண்ட கால குத்தகை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் கள யதார்த்தங்கள் குறித்த தெளிவான புரிதலைப் பேணிக்கொண்டு, தொழில்துறையின் அனைத்து பங்குதாரர்களும் எவ்வளவு திறம்பட இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் வர்த்தக விவசாயத்தின் எதிர்காலம் அமையும் என்பதை அவர் வலியுறுத்தினார்.