
உலக ஈட்டி எறிதல் சாம்பியனான இலங்கை வீரன் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க துருக்கியின் தேசிய விமான நிறுவனமான டேர்கிஷ் எயார்லைன்ஸ் (Turkish Airlines) ஒப்புக்கொண்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வளாகத்தில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
ஹங்கேரியிலிருந்து டேர்கிஷ் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே ருமேஷ் தரங்கவின் 4 ஈட்டிகள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து டேர்கிஷ் எயார்லைன்ஸ் பிரதிநிதிகள் கவலை தெரிவித்ததுடன், நிறுவன விசாரணைகளை மேற்கொண்டு சேதங்களை முறையாக மதிப்பீடு செய்து விரைவாக இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.


