ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷ எம்.பி. 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகச் சந்தேகநபராக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் மீதான உத்தரவு அன்றைய தினம் பிரகடனப்படுத்தப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இவ்வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.