ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை இழக்கும் இலங்கை?

2027ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் 28 வரை இலங்கையில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ‘ கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின்’ (Transformation Committee) கீழ் நிர்வகிக்கப்படுவதே இத்தீர்மானத்திற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐசிசி விதிகளின்படி, அங்கத்துவ நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகள் அரசியல் தலையீடுகள் இன்றி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினால் நிர்வகிக்கப்பட வேண்டும். அரச தலையீடுகளை ஏற்றுக்கொள்ளாத ஐசிசி, நிர்வாகக் குழுவின் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு கூடிய விரைவில் தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

எவ்வாறாயினும், அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையிலிருந்து மாற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர், குறித்த தொடர் நடைபெறவுள்ள புதிய இடம் குறித்த தீர்மானம் எதிர்வரும் ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு மட்டுமன்றி, நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் பெரும் நிதியிழப்பு ஏற்படும். இத்தொடருக்காக வருகை தரும் அணிகள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூலம் நாட்டிற்குக் கிடைக்கவிருந்த அன்னியச் செலாவணி வருவாய் இதனால் கைநழுவிப் போகிறது. இதற்கு முன்னரும் 2023ஆம் ஆண்டில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரினால் இடைக்காலக் குழுவொன்று நியமிக்கப்பட்டதால், 2024 ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்து, அது தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, 6 அணிகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்குத் தரவரிசையில் முன்னிலையிலுள்ள 5 அணிகளும், போட்டி நடத்தும் நாடும் தகுதி பெறும். இலங்கை தற்போது 6ஆவது இடத்தில் உள்ளதால், இப்போட்டி வேறு நாட்டிற்கு மாற்றப்படுவதன் மூலம் இம்முறை ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் வாய்ப்பையும் இழக்கும் தீவிர ஆபத்து உருவாகியுள்ளது.