
இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள வெள்ளைப் பந்து (ஒருநாள், டி20 தொடர்) தொடர்களுக்கான இலங்கை தேசிய அணிகளில், முன்னாள் தலைவர்களான தசுன் ஷானக மற்றும் சரித் அசலங்க ஆகியோர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நிறைவுக்கு வந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கோல் கெலன்ட்ஸ் அணிக்காக மூன்று அரைச் சதங்களைக் குவித்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, சரித் அசலங்க டி20 அணியில் மீண்டும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, மத்திய வரிசை மற்றும் ஃபினிஷிங் வரிசையைப் பலப்படுத்தும் நோக்கில், சகலதுறை வீரர் தசுன் ஷானக எதிர்பாராத விதமாக ஒருநாள் அணியில் மீண்டும் சேர்க்கப்படவுள்ளார்.
இந்த நிலையில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரில் 434 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த விக்கெட் காப்பு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு உதாரவும் டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளார்.
மறுபுறத்தில் இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத லெக்-ஸ்பின் சுழல்பந்து வீச்சாளர் சச்சிந்து கொலம்பகே மற்றும் இரு கைகளினாலும் பந்துவீசக்கூடிய சுழல்பந்து வீச்சாளர் தரிந்து ரத்நாயக்க ஆகியோரும் தேசிய அணிக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவுக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரை காயம் காரணமாக இழக்க நேரிட்ட இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணித்தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோரும் இத்தொடரில் மீண்டும் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


