வரி செலுத்தப்படாத இறக்குமதி பொருட்கள்: கடைகளில் அதிரடி சோதனை ஆரம்பம் – பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

வரி செலுத்தப்படாத, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட அல்லது குறைந்த விலைப்பட்டியல் மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இறக்குமதிப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான பொருட்களைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் தற்போது ‘பின்னோக்கிய கணக்காய்வு’ (backward audit) நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஊடாக சுங்கவரி முறையாகச் செலுத்தப்பட்டுள்ளதா என்பது தீவிரமாக ஆராயப்படும்.

மறுவிற்பனைக்காகப் பெறப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் முறையான ரசீதுகள் மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும், அசாதாரண குறைந்த விலையில் விற்கப்படும் இறக்குமதி பொருட்கள் குறித்து அமைச்சுக்குத் தகவல் வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட திடீர் சோதனைகளில், முறையான ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இறக்குமதி அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.