மோசமான வானிலை: நுவரெலியா, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை (04) மூடப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழை உள்ளிட்ட மோசமான வானிலை நிலைமைகளை கருத்திற்கொண்டு, மாவட்டத்தின் அனைத்து கல்வி வலயங்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்மலை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படும்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தனியார் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் கடுமையான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளன.

தொடர்ச்சியான மழை மற்றும் திடீர் காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.