கத்தாரில் ஒரு வாரத்தில் 4 இளைஞர்கள் திடீர் மரணம்;  விழிப்புணர்வுக்கான பதிவு

கத்தாரில் கடந்த ஒரே வாரத்திற்குள் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு இளம் தொழிலாளர்கள் திடீரென மரணமடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம், பிராந்தியத்தில் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வுக்கான தேவையையும் ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய திடீர் மரணங்களுக்குத் தொழில் ரீதியான மன அழுத்தம், போதிய உடற்பயிற்சி இன்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவையே முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, சம்பள தாமதம், கடுமையான பணிச்சுமை மற்றும் வேலை பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் தொடர் மன அழுத்தம், இந்த இளைஞர்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மேலும், கத்தாரின் கடுமையான வெப்பம் காரணமாகப் பலர் தங்களது அறைகளிலேயே முடங்கிவிடுவதால் உடல் உழைப்பு குறைவதோடு, மெஸ் (Mess) உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதாலும், சமைக்கத் தயங்குவதாலும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, மாரடைப்பு உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.எனவே, புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் தங்களின் மன அழுத்தங்களை அறையிலுள்ள நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளுமாறும், தினமும் எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், ஆரோக்கியமான வீட்டு உணவுகளைச் சமைத்து உண்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.நமது உயிரும் ஆரோக்கியமும் நம்மை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்திலும், மனநலத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் அல்லது கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.